பெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது !!!

, 2 Comments »
பெண்களின் 14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில் அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக ஒரே ஒரு எம்.பி.,யும் ஓட்டளித்தனர். மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேறியதன் மூலம், 14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.


லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்தது. இதையடுத்து, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தயார் செய்யப் பட்டு, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவில், இதர பிற்பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் வலியுறுத்தின.அதனால், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழுவும், மசோதாவை தற்போதைய நிலையிலேயே நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, மசோதாவை மீண்டும் பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினமும், நேற்றும் சமாஜ் வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உட்பட சில கட்சிகளின் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், ஏழு எம்.பி.,க்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதன்பின் மசோதாவின் மீது விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேசினர். இறுதியாக, மசோதா ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது. ராஜ்யசபாவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. இவர்களில் 233 பேர் நேற்று சபைக்கு வந்திருந்தனர். இவர்களில் 155 பேரின் ஆதரவு தேவை. ஆனால், 186 எம்.பி.,க்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். ஒரே ஒரு எம்.பி., மட்டும் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தார். இதன்மூலம் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன், பெண்கள் மசோதா நிறைவேறியதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் ஓட்டளித்தன.வரலாற்று சிறப்புமிக்க இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் புதிய அரசியல் சகாப்தம் துவங்கியுள்ளது.ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ள இந்த மசோதா, இனி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். லோக்சபாவிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநடப்பு: பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மீது, ராஜ்யசபாவில் நேற்று நடந்த ஓட்டெடுப்பின் போது, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பங்கேற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. அதேபோல், மசோதாவை தற்போதைய நிலையில் நிறைவேற்றக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் 15 பேரும், ஓட்டெடுப்பிற்கு முன்னதாக சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மசோதாவை தற்போதைய நிலையில் நிறைவேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்ததால், அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் ஏழு பேரும் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அதேபோல், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன

.பார்லிமென்டின் இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேறி விட்டால், லோக்சபாவில் மொத்தமுள்ள தேர்ந்தெடுக்கப்படும் 543 எம்.பி.,க்களில், 181 பேர் பெண்களாக இருப்பர். அதேபோல், 28 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் மொத்தமுள்ள 4,109 எம்.எல்.ஏ.,க்களில் 1,370 பேர் பெண்களாக இருப்பர். ஒருவகையில் ஆண்கள் பிரதிநிதித்துவம் குறையும். ஆனால், மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் பெண்கள் என்பதை பலரும் மறந்தனர். ஆப்கன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள பிரதிநிதித்துவ சதவீதம் இங்கே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மசோதா மீது விவாதம் நடந்த போது குறுக்கிட்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "இந்தச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை. இது சிறுபான்மையினருக்கோ அல்லது தாழ்த்தப் பட்டோர் அல்லது மலைவாழ் பழங்குடியினருக்கோ எதிரானது அல்ல' என்றார்.

பெண்கள் மசோதா: அன்று முதல் இன்று வரை... :

1974: நாட்டில் பெண்களின் நிலை தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கமிட்டி, மத்திய கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், பார்லிமென்டில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

1993: பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வகை செய்யும் 73 மற்றும் 74வது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

1996 (செப்டம்பர் 12): தேவகவுடா தலைமையிலான அரசு பதவியில் இருந்த போது, 81வது அரசியல் சட்டத் திருத்தமாக பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், கவுடா அரசு சிறுபான்மை அரசாகி விட்டதால், 11வது லோக்சபா கலைக்கப்பட்டது.

1998 (ஜூன் 26): 12வது லோக்சபாவில், 84வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த முறையும், வாஜ்பாய் அரசு சிறுபான்மை அரசாகி, லோக்சபா கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேறாமல் போனது.

1999 (நவம்பர் 22): 13வது லோக்சபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால், இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதால், மசோதா நிறைவேற்றப்படவில்லை. 2002 மற்றும் 2003ல் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டாலும், நிறைவேற்ற முடியவில்லை.

2008 (மே 6) : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், ராஜ்யசபாவில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
டிசம்பர் 17): நிலைக்குழு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மசோதாவை தாக்கல் செய்யலாம் என, தெரிவித்தது.

2010 (பிப்ரவரி 22): பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

2010 (பிப்ரவரி 25): பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2010 (மார்ச் 8): ராஜ்யசபாவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரலாறு காணாத அளவிலான ரகளை அரங்கேறியது.

2010 (மார்ச் 9): பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, ராஜ்யசபாவில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

THANKS DINAMALAR

2 Responses to "பெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது !!!"

Starjan (ஸ்டார்ஜன்) Says :
March 9, 2010 at 12:22 PM

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்பது அவசியமான ஒன்று. இது வரவேற்கத்தக்கது. இது ஒரு வரலாற்றுச் சாதனை.

பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற என்னுடைய வாழ்த்துகள்.

இளமுருகன் Says :
March 9, 2010 at 9:08 PM

வரவேற்க பட வேண்டிய ஒன்றுதான்.
இளமுருகன்
நைஜீரியா.

Post a Comment